செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மாலோத் அனில் (23). இவர் நேற்று தனது மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, அந்த ஒயரை அப்படியே தொங்கவிட்டுள்ளார். தொடர்ந்து இரவு அதன் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது தூக்கத்தில் அவர் கை சார்ஜரில் பட்டதில், செல்போன் சார்ஜர் மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், உயர்தர வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான அனிலுக்கு மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அனிலின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதேபோல பெங்களூரில் 24 வயது இளைஞன் தனது தொலைபேசியை சார்ஜ் செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் ஸ்ரீநிவாஸ் தனது ஸ்மார்ட்போனை சார்ஜரில் சொருகும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். அந்த சம்பவத்தின் போது அவரது இரண்டு நண்பர்களும் அவரோடு இருந்துள்ளனர். உடனடியாக ஸ்ரீநிவாஸை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஸ்ரீநிவாஸ் சார்ஜர் போடும்போது அவரது கை லேசாக ஈரமாக இருந்துள்ளது. இதனால் மின்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.