ஒகேனக்கல் | ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த சுற்றுலா பயணிகள்!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ பிரதான அருவி மற்றும் சினி பால்ஸ் அருவி என 2 அருவிகள் உள்ளன.
ஒகேனக்கல் அருவியில், சுழல்கள் மற்றும் ஆபத்து நிறைந்த இடம் என்பதால் சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பொங்கல் விடுமுறை என்பதால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் கம்பி தடுப்புகளை தாண்டி தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. எனவே உரிய அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.