சாலையில் தாறுமாறாக ஓடிய கார் - சிறுமி உட்பட மூவர் காயம் !
ஆரணி அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணியில் நேற்று (டிச.27) மாலை கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடியது. அந்த கார் சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மேல் மோதி விபத்து ஏற்படுத்திய நிலையிலும் நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ஆறுமுகம் என்பவர் காயமடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து அதிவேகமாக சென்ற கார் சிறிது தூரத்தில் இருந்த கடைக்குள் புகுந்து சுவற்றில் மோதி நின்றது.
அந்த கார் ஏற்படுத்திய விபத்துக்களில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த சிறுமி ஓவியா, ராஜாமணி, வேல்முருகன் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்குன்றம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த காரை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததது.
இதனையடுத்து, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆரணி அத்திகுளம் பகுதியை சேர்ந்த ஹேமகுமார் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.