"உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்" - அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேச்சு
"உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்" - அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் உருக்கமாக பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை அவர் புறக்கணித்திருந்தார். 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் நேற்று விசாரணையைத் தொடங்கினர். இதன் காரணமாக நேற்று காலை முதலே முதலமைச்சரின் இல்லம் மற்றும் அமலாக்கத்துறையின் வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: அருணாச்சல பிரதேசம் சென்றடைந்த ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’!
இதற்கிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டமும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 8மணிநேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. முதலமைச்சரின் வீடு முன்பு அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்குப்பின் அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேசியதாவது..
"எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" என ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.