“பிரபாகரனிசத்தில் கட்சியை தொடங்கி சீமானிசத்தில் நிறுத்தியுள்ளீர்கள்” - சீமானுக்கு தவெக பதிலடி!
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோரை வரவழைத்துப் பேசினார். இதற்கு பணக்கொழுப்புதான் காரணம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்நிலையில் சீமானின் இந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக தவெக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால், சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல், பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?.
திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. நாங்கள் சட்ட மன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம். நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.
ஒன்று சொல்லட்டுமா, எங்கள் தலைவர் விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது”. எனக் குறிப்பிட்டுள்ளார்.