அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த தம்பதி!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர். இவர்கள் மதுரையில் கிரானைட் மற்றும் உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்களது கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை இன்று தானமாக வழங்கினர்.
அரசு நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கீழையூர் கிராமத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கட்டடம் கட்டுவதற்காக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வெகுதூரம் சென்று பள்ளி மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பது என்பது சாத்தியம் இல்லை. இதனை கருத்தில் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, அதே கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் தமிழ்ச்செல்வி தம்பதியரிடம் அணுகி தங்களுக்கு நிலம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து மேலூர் திருப்பத்தூர் சாலையில் தம்பதியினர்க்கு சொந்தமாக உள்ள ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 2.15 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்தனர். மேலூர் கிழக்கு சார்பதிவாளர் முன்னிலையில் நிலத்தை பதிவு செய்து கொடுத்தனர்.
அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியருக்கு கிராம பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியை செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றி தெரிவித்து கொண்டனர்.
இதுகுறித்து தம்பதினர் கூறுகையில், தாங்கள் பிறந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளதாக தம்பதியனர் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மருத்துவமனை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.