For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் அறிவீர்கள்” - வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமாக கடிதம்!

09:55 PM Jun 23, 2024 IST | Web Editor
“என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் அறிவீர்கள்”   வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமாக கடிதம்
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

Advertisement

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி என இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.  தேர்தல் முடிவுகளில் போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து எந்த தொகுதியில் எம்பியாக தொடர்வார் என கேள்வியும் எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்த ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்பியாக தொடர உள்ளதாகவும், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்து ராஜினாமா செய்தார்.

மேலும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது..

“வயநாட்டின் சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் நலம் என நம்புகிறேன். நான் செய்தியாளர்கள் முன்னிலையில் நின்று, எனது முடிவு குறித்த அறிவிப்பை வெளிப்படுத்திய தருணத்தில் என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கக்கூடும்.

நான் சோகமாக இருக்க காரணமென்ன? உங்களை 5 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தேன். முதன்முறையாக உங்களை சந்தித்தபோது, உங்களின் ஆதரவை தேடி வந்தேன். உங்களைப் பொருத்தவரையில், அப்போது நான் ஒரு வெளியாளாக காணப்பட்டேன்.

ஆனால் நீங்கள் என் மீது நம்பிக்கை கொண்டீர்கள். என்னை கட்டுக்கடங்காத பாசத்தால் அணைத்தீர்கள். எந்த அரசியலுக்கு நீங்கள் ஆதரவளித்தீர்கள் என்பதோ, எந்த சமூகப் பிரிவைச் சார்ந்தவர் என்பதோ, எந்த மதத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதோ, எந்த மொழியைப் பேசுகிறீர்கள் என்பதோ பொருட்டல்ல.

நான் நாள்தோறும் விமர்சனங்களை சந்தித்தபோது, உங்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை பாதுகாத்தது. நீங்களே எனது அடைக்கலமாக, எனது வீடாக, எனது குடும்பமாக இருந்தீர்கள். நீங்கள் என்னை சந்தேகப்பட்டதாக எந்தவொரு தருணத்திலும் நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

வெள்ள பாதிப்புகளில் எல்லாவற்றையும் இழந்து வாடியபோதும், நீங்கள், அங்குள்ள ஒரு சிறு குழந்தை கூட தன்மானத்தை மட்டும் இழக்கவில்லை. நீங்கள் பாசத்துடன் எனக்கு அளித்த எண்ணிலடங்கா மலர்களையும், அரவணைப்புகளையும் நினைவுகூர்ந்து கொண்டிருப்பேன். ஆயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில் நான் பேசியதை அங்குள்ள இளம்பெண்கள் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அழகாக மொழிபெயர்த்துக் கூறியதை எப்படி மறப்பேன்? நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக இருந்தது கௌரவமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது.

நான் சோகமாக உள்ளேன். ஆனால் எனது சகோதரி பிரியங்கா உங்களின் பிரதிநிதியாக அங்கே இருப்பார். அவருக்கு நீங்கள் வாய்ப்பளித்தால், அவர் உங்கள் எம்.பி.யாக மிகச்சிறப்பாக தன் பணியைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

ரேபரேலியில் அன்பான குடும்பம் உள்ளது. அங்குள்ள மக்களுடன் உறவு உள்ளது. உங்களுக்கும் ரேபரேலி மக்களுக்கும் நான் கூறுவது, நாட்டில் பரவிவரும் வெறுப்புணர்வை நாம் போராடி வீழ்த்துவோம். வன்முறையை தோற்கடிப்போம்.

நீங்கள் அளித்த அன்புக்கும், பாதுகாப்புக்கும், உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது எனத் எனக்கு தெரியவில்லை. நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதி.. உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் எப்போதும் இருப்பேன். மிக்க நன்றி! ” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement