“மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்!” - எடப்பாடி பழனிசாமி!
மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
சேலத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் கன மழை காரணமாக சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காாமல் பார்த்துக் கொள்வோம் என தெரிவித்தனர். 4000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு மழை நீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டது. ஒருநாள் மழைக்கு சென்னை தத்தளித்து வருகிறது. முழுமையான மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை. நிர்வாக திறமை இல்லாத அரசு. ஊழல் செய்வதில் மட்டும்தான் முதன்மை அரசு இது.
சென்னையில் கார் பந்தயம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. இதற்காக ரூ.242 கோடி செலவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ரூ.42 கோடியில் சாலையை அரசு சீர் செய்துள்ளது. பந்தயத்திற்காக இவ்வளவு தொகை செலவு செய்வது கண்டிக்கத்தக்கது.
கார் பந்தயம் நடத்துவதற்கு ஏற்கனவே இருக்கும் இடத்தில் தனி ஓடுதளம் உள்ளது. 42 கோடி ரூபாய் செலவு செய்வது கண்டிக்கத்தக்கது. அரசு நிதி இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், இவ்வளவு தொகை செலவு செய்வது எந்த வகையில் நியாயம். சென்னையில் உள்ள அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தரமான உணவு வழங்கப்படவில்லை. பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
கார் பந்தையத்திற்கு செலவு செய்துவிட்டு, ஏழை எளிய மக்கள் உண்ண உணவு வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது. கார் பந்தயம் முக்கியமா? மேல் தட்டு மக்கள் மட்டுமே இதனை ரசிப்பார்கள். கீழ் தட்டு மக்கள் வசிப்பதற்கு வீடு இல்லை. பல்வேறு இடங்களில் வடிகால் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இப்படிப்பட்ட இடங்களில் பணத்தை செலவழித்து இருந்தால் நல்ல அரசாக இருந்திருக்கும். இது விளம்பர அரசு மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது.
மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். அண்ணாமலை தான் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளோம். தேர்தல் அறிவித்தால்தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும். தேர்தல் நேரத்தில் உங்களை எல்லாம் அழைத்து அறிவிப்பேன். சட்டப் பேரவையில் சட்டப்பேரவை தலைவர் எப்படி செயல்படுகிறார் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும்.
ஜனநாயக முறைப்படி அவர் செயல்படுகிறாரா? அவை மரபை கடைபிடிக்கிறாரா? அவர் சரியா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அவர் ஒரு கட்சிக்காரரை போல் பேசுகிறார். எல்லா பிரச்சனையும் சட்டமன்ற தலைவரே பேசுகிறார். சட்டப்பேரவை மரபையே கடைப்பிடிக்காத ஒரு சட்டப்பேரவை தலைவர் அவர் பேச்சை பொருட்படுத்த தேவையில்லை. நடுநிலையாளராக, ஜனநாயக முறைப்படி நடந்திருந்தால் அவர் சொல்வதை கேட்போம். அதிமுக சட்டப்பேரவையை மதிக்கும் கட்சி. திமுக ஆட்சிக்கு வரும் போது ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என இரட்டை நிலைப்பாடு கொண்டது.
இவ்வாறு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.