“தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை!” - கூட்டணி குறித்து சீமான் கருத்து!
நாம் தமிழர் எப்போதும் எந்த கூட்டணியிலும் இணையாது; நிரந்தர வெற்றியை தற்காலிக தோல்விக்காக இழக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் 16ஆம் ஆண்டு
நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த சீமான் பேசியதாவது:
எதிர்காலத்தில் நான் யாரோடும் கூட்டணி இல்லை என்னோடு யார் கூட்டணியில்
வருவார்கள் என்று பார்க்கின்றேன். நான் தத்துவத்தை நம்பி தனித்துவத்தோடு நிற்கின்றேன். கோட்பாடுகளை நம்பி நிற்கின்றேன். நான் கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வரவில்லை. இந்த கட்டடத்தை எடுத்து விட்டு வேறு கட்டிடம் கட்ட வந்துள்ள புரட்சியாளர் நான்.
மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தமிழகத்தின் மிகப்பெரிய
வளர்ச்சி. குடிக்கிற மக்கள் கொடுக்கிற காசு அதனால் இது குடியரசு நாடு எனவே இது திராவிட மாடலின் சிறப்பு. சீருடையோடு மாணவர்கள் வந்து மது கேட்கின்றார்கள் . வியாபார நோக்கத்திற்காக தொழிலாளர்களும் அவர்களுக்கு மது கொடுக்கிறார்கள்.
டாஸ்மாக் மேலாளர்கள் ஆய்விற்கு செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் வியாபாரம் குறைகிறது. இது குறித்து கேட்கும் போது அடுத்த வாரம் வியாபாரம் சரியாகும் என்று டாஸ்மாக் ஊழியர் கூறுகிறார். எப்படி சரியாகும் என்று மேலாளர்
விசாரிக்கும் போது பக்கத்தில் கல்லூரி திறக்கப்பட உள்ளது என்று டாஸ்மாக்
ஊழியர் கூறுகிறார்.
கோழையை போய் வீர சாவர்க்கர் என்று பேசக் கூடியவர்கள் மத்தியில் எப்படி பேசமுடியும்? ரசிகர்களை கூட்டி கட்சி ஆரம்பித்தாலே அது நடிகர் சங்கம். எனவே ரசிகர்களை சந்திக்காமல் மக்களை சந்தித்து அரசு அரசியல் கட்சி தொடங்கிய ஒரு தலைவன் நானே.
திருநெல்வேலியில் இன்றும் சாதிய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சாதிய
படுகொலைகள் திருநெல்வேலியில் தொடர்ந்து அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழிக்க வேண்டும் என்றால் கடும் சட்டங்கள் மட்டுமே தேவைப்படும். சாதிய கொடுமைகள் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்கக் கூடாது. சனாதன ஒழிப்புவாதிகள் சாதிய தலைவர்கள் அவர்களிடத்திலே இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும். தமிழர்கள் கூடி வாழ்பவர்கள் ஆனால் பிரிந்து செயல்படுபவர்கள்.
இடஒதுக்கீடு என்பது யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு முதலில் கொடுக்க
வேண்டும். எல்லாருக்கும் உண்டானது எல்லாருக்கும் கிடைத்துவிட்டால் உனக்கான கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் அனைத்தும் உயர்ந்துவிடும்.
8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சருக்கு இல்லாத
அதிகாரம் ஒரு நியமன உறுப்பினருக்கு இருக்கிறது என்றால் இதில் என்ன மாநில உரிமை உள்ளது?
தேர்தல் வரும் காரணத்தினால் முத்துராமலிங்கரை பற்றி பேசக்கூடிய தேவையும்
வருகிறது. மது விற்று வரக்கூடிய வருமானம் குஷ்டரோகிகளின் கையில் உள்ள வெண்ணெய்க்குக சமம் என்று அண்ணா கூறியுள்ளார். மாடு வளர்ப்பது அவமானம் ஆவின் பால் விற்பது வருமானமா? நிரந்தர வெற்றியை தற்காலிக தோல்விக்காக இழக்க விரும்பவில்லை. நாம் தமிழர் எப்போதும் எந்த கூட்டணியிலும் இணையாது என்று கூறினார்.
தொடர்ந்து லியோ வெற்றி கொண்டாட்ட விழாவில் நடிகர் விஜய் 2026-ல் cup முக்கியம் பிகிலு என்று கூறியது குறித்து கருத்து தெரிவித்த சீமான், ஒவ்வொருத்தருக்கும் கருத்து இருக்கும். இலக்கே இருக்க கூடாது என்று கூட பார்க்க முடியாது அது அவரின் ஆசை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.