"எனக்கு தெரிந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியவில்லை" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
‘எனக்கு தெரிந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியவில்லை’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “50% இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வரும் நிலையில் எப்போதோ 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜின் கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்தார். அதில் "69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : தனுஷுக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி? – வெளியான புதிய தகவல்!
இந்நிலையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் தேசிய கொள்கைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது :
“நான் அரசியல் தான் செய்கிறேன். எந்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் என்றும் மக்கள் கட்சி. காவிரி பிரச்னை அரசியல்வாதிகள் தீர்க்கும் பிரச்னை இல்லை. அறிவாளிகளால் தீர்க்க வேண்டிய பிரச்னை. இதில் தமிழர்கள் மற்றும் கர்நாடகா மக்களிடையே பிரச்னையை தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றனர். காவிரி பிரச்னைக்கு அறிவியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும்.69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று அவரது நூற்றாண்டு விழாவில் பேசினேன். ஆனால் அதற்கும் ஜெயலலிதாவிற்கும் சம்பந்தம் இல்லை என சொல்லவில்லை. இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோருக்கும் பங்குண்டு. நான் கர்நாடகவை சேர்ந்தவன். எனக்கு தெரிந்த வரலாறு கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியவில்லை”
இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.