நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! - பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!
பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவர் நெருப்புடன் விளையாடுவதாக கருத்து தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலம் தாழ்த்துவதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது.
பஞ்சாப் மாநிலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகளும், ஆளுநரின் செயல்பாடுகளும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், இரு தரப்பும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தது. மேலும் பஞ்சாப் ஆளுநர் நெருப்புடன் விளையாடுவதாக எச்சரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என்றும் கேள்வி எழுப்பியது.
இதையும் படியுங்கள் : காஸா வீதிகளில் இஸ்ரேல் – ஹமாஸ் தீவிர மோதல்!
அதே போல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை ஆளுநர் எவ்வாறு முடக்க முடியும்? என்றும், ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை யார் கொடுத்தது? என்றும், சட்டப்பேரவை அமர்வு முடிக்கப்பட்டதால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று எப்படி கூற முடியும்? என்றும், ‘நீங்கள் செய்துகொண்டிருப்பதன் தீவிரம் புரிகிறதா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. பஞ்சாப்பில் நடப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.