தாஜ்மஹாலுக்குள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல தடை!
தாஜ்மஹாலுக்குள் தண்ணீர் எடுத்து செல்லக் கூடாது என இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உலக அதிசயங்களுள் ஒன்று இந்தியாவின் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மஹால். தனது மனைவி மும்தாஜ்க்காக, மன்னர் ஷாஜஹான் கட்டிய காதல் கோட்டைதான் இந்த தாஜ்மஹால். காதலர்களின் கனவுக் கோட்டையாகவும் இந்த தாஜ்மஹால் உள்ளது.
இந்த நிலையில் தாஜ்மஹாலினுள் நீரை எடுத்துச் சென்று இந்துக் கடவுளை வழிபட்டு, நீரபிஷேகம் செய்ததாகக் கூறி கடந்த சனிக்கிழமையன்று அகில பாரத இந்து மகாசபையின் 2 உறுப்பினர்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிவனுக்கு உகந்த நாளான, சாவான் மாதத்தின் மூன்றாம் திங்கள்கிழமையான ஆக. 5ஆம் தேதி, இந்து மகாசபையின் மகளிர் பிரிவின் மாவட்டத் தலைவர் மீரா ரத்தோரும் தாஜ்மகாலுக்கு சென்று, நீரபிஷேகம் செய்ததுடன் தாஜ்மகாலினுள்ளேயே காவிநிறக் கொடியையும் ஏற்றி பதற்றத்தை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, மீராவையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். தாஜ்மகாலினுள்ளே நீரபிஷேகம் செய்த மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுற்றுலா வழிகாட்டிகள் நலச் சங்கத்தின் தலைவர் தீபக் டான், “வெப்பமான காலநிலைகளில் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் இல்லாமல் தாஜ்மகாலில் இருக்க முடியாது. தண்ணீர் பாட்டில்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, அதிகாரிகள் விழிப்புடன் இருந்தால் நல்லது.
இந்த நடவடிக்கையை எங்கள் சங்கம் எதிர்க்கிறது. தண்ணீர் இல்லாமல், பார்வையாளர்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த முடிவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இருப்பினும், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ்குமார் படேல், "பார்வையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்" என்று உறுதியளித்தார்.