"பாலியல் ரீதியாக தவறு செய்தவர்களை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்!" - இயக்குநர் #Perarasu
பாலியல் குற்றங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்களை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குனர் பேரரசு. இவர் திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி, திருப்பதி, பழனி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த சூழலில், இவர் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசியதாவது, "சினிமாதுறையில் கூறப்படும் பாலியல் குற்றங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் கண்டிக்க வேண்டும். தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டனம் தெரிவிப்பதோடு விடாமல் திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
தவறு செய்தவர் நடிகராக இருந்தால் நடிக்கவும், இயக்குநராக இருந்தால் திரைப்படத்தை இயக்கவும், தயாரிப்பாளராக இருந்தால் திரைப்படத்தை தயாரிக்கவும் தடை விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தவறு செய்ய அஞ்சுவார்கள். இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்காது. இதனால் இதற்கு காவல்துறையோ, நீதிமன்றமோ தண்டனை வழங்கிட முடியாது. இதனால் சங்கங்கள் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடந்தால் நடிகைகள் உடனடியாக புகாரளிக்க வேண்டும். 8,10 வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும். நடிகைகளுக்கு மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள எந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டாலும் நடிகர் - நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்."
இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.