wpl தொடர் | 202 இலக்கு நிர்ணயித்த குஜராத் அணி - வரலாறு படைத்த ஆர்சிபி அணி!
நடப்பாண்டின் பெண்கள் பிரீமியர் லீக் (wpl) போட்டி நேற்று (பிப். 14) வதோதராவில் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதினர். இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது.
இப்போட்டியின் தொடக்கம் முதலே குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பெத் மூனி ஆர்சிபி அணியின் பந்து வீச்சை சிதறடித்து அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய பெத் மூனி பிரேமா ராவட் பந்து வீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக இறுதி வரை விளையாடி 79 ரன்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை சேர்த்தது.
பின்னர் 202 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணி களமிறங்கியது. ஆனால் ஓப்பனிங் பேட்டர்கள் கைக்கொடுக்கவில்லை. பின்னர் களமிறங்கிய எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து சயாலி சத்காரேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, பேட்டர்கள் ரன்களை குவிக்கத் தொடங்கினர். இறுதியில் ரிச்சா கோஷ் 27 பந்துக்கு 64 ரன்களை விளாசி தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியாக 18.3 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி மிகப்பெரிய இலக்கான 202 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்ட நாயகராக ரிச்சா கோஷ் தேர்வு செய்யப்பட்டார். பெண்கள் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே 200+ ஸ்கோரை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது ஆர்சிபி அணி.