இங்கிலாந்து கேப்டனாக தொடர விரும்புகிறேன் - ஜோஸ் பட்லர் விருப்பம்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023, இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்த தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில், 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரையிறுதி வாய்ப்பையும் இழந்து வெளியேறியுள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரில், தனக்கான கடைசி ஆட்டத்தில், நாளை மறுநாள் (நவம்பர் 11) பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு பல்வேறு காரணங்களை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக தானே தொடர விரும்புவதாக அந்நாட்டு வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20, ஒருநாள் கிர்க்கெட் தொடர்களில் இங்கிலாந்து அணியை வழிநடத்த விரும்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ராப் கி, இந்தியாவிற்கு வரவுள்ளார். அவருடன் போட்டிகளைக் குறித்து பேசுவோம்.
இதையும் படியுங்கள் : முடிவுக்கு வந்தது ஹாலிவுட் நடிகர்களின் 4 மாத போராட்டம்..!
அடுத்த மாதம் வரவிருக்கும் தொடர்கள் குறித்து ராப் கி உடன் ஆலோசிப்போம். இந்த உலகக்கோப்பை தொடரில் அணிக்காக என்னால் ரன்கள் குவிக்க முடியாதது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவேன். நாங்கள் நினைத்தது போன்று இந்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.