உலகில் முதன்முறையாக சிறுவனின் மூளையில் வலிப்புநோய் கட்டுப்பாட்டு கருவி!
உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில் பொருத்தபப்ட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஓரன் நால்சன் என்ற 13 வயது சிறுவனுக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்துள்ளது. 3 வயதில் தொடங்கிய வலிப்பு நோய், நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான முறை வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் லண்டன் கல்லூரி பல்கலை, கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை ஆகியவற்றின் கூட்டணியில் கடந்த அக்டோபரில் வலிப்புநோயை கட்டுப்படுத்தும் கருவியை மூளையில் பொறுத்தும் முதல் அறுவை சிகிச்சை சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுக் கருவி, மூளைக்கு எலெக்ட்ரிக்கல் சமிக்ஞைகளைக் கொடுத்து ஒரு நாளில் ஏற்படும் வலிப்பு எண்ணிக்கையை 80 சதவீதம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் மூளையில் இந்தக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட பிறகு அவன் இயல்பாக இருப்பதாகவும், முன்பை விட சுட்டியாக, மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். குதிரை ஏற்றம், விளையாட்டு என அவனது வாழ்க்கை மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
3.5 செ.மீ. சதுரத்தில் 0.6 செ.மீ. தடிமன் கொண்ட கட்டுப்பாட்டுக் கருவி, ஓரனின் மண்டை ஓடு அதற்கேற்ப வெட்டி எடுக்கப்பட்டு அதற்குள் வைத்து மண்டை ஓட்டுடன் ஸ்குரூ போட்டு இணைக்கப்பட்டுள்ளது. தலையில் மாட்டும் ஹெட்போன் போன்ற கருவி மூலம், இந்த கட்டுப்பாட்டுக் கருவிக்கு சார்ஜ் போடப்படுகிறது. அறுவை சிகிச்சையிலிருந்து சிறுவன் உடல்நலம் தேறிய பிறகே, இந்த கருவி இயக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் , சிறுவனின் மூளைக்கு மிக லேசான எலெக்ட்ரிக்கல் தூண்டுதல் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும், இதனால், வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால், சிறுவன் தற்போது நல்ல உடல்நலத்துடன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.