பிலிப்பைன்ஸ் : கல்மேகி புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. கனமழையால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைமேடு போல ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்துள்ளது.
இதனிடையே பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டின் குடியரசு தலைவர் பெர்டினண்ட் மார்கோஸ் தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.
இதனால், நிவாரண உதவிக்கான நிதியை அரசு ஒதுக்க முடியும். அதனுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான அடிப்படை விலை நிர்ணயமும் செய்ய முடியும். புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைன்ஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.