நாளை தொடங்குகிறது ; உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்..!
12 அவது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், புது தில்லியில் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் இப்போட்டிகள் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 100 நாடுகளை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 70 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இப்போட்டியில் 186 பதக்கத்திற்கான போட்டிகள் நடைபெறுகின்றன. அதனாசியோஸ் கவேலாஸ், எஸ்ரா ஃப்ரெச், ஜேம்ஸ் டர்னர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற வீரர்கள் நட்சத்திர வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி நேற்று டெல்லியில் கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடந்தது. இதில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ரக்ஷா காட்சே, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத், டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் மற்றும் உலக பாரா தடகளத் தலைவர் பால் ஃபிட்ஸ்ஜெரால்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கத்தார் (2015), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2019) மற்றும் ஜப்பான் (2024) ஆகியவற்றைத் தொடர்ந்து, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பை நடத்தும் நான்காவது ஆசிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.