105/127 | உலக பட்டினி குறியீட்டில் மிகவும் மோசமான இடத்தில் #India!
உலகளாவிய பட்டினி குறியீட்டில் 105வது இடத்தில் இந்தியா உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் உலகின் 127 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி, பசி பிரச்னைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 105வது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ‘தீவிரமான பசி பிரச்னைகள்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில், நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியா பின்தங்கி உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சற்று மேலே உள்ளது.
அயர்லாந்தின் ‘கன்சர்ன் வேர்ல்டுவைட்' மற்றும் ஜெர்மனியின் 'வெல்ட் ஹங்கர் லைஃப்' ஆகிய அமைப்புகள் இணைந்து 19வது உலக பட்டினி குறியீடு-2024-ஐ வெளியிட்டன. அதன்படி இந்தியா 105வது இடத்தில் உள்ளது. 2024 அறிக்கையின்படி இந்தியாவின் மதிப்பெண் 27.3. கடந்த இருபது ஆண்டுகளை ஒப்பிடுகையில், பட்டினி குறியீட்டில் இந்தியா முன்னேறினாலும், இந்தியாவில் இன்னும் பட்டினி குறையவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மேலும் இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது; அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2000ம் ஆண்டிலிருந்து குழந்தை இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே இருப்பதாக மேற்கண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.