For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் - கை நழுவிய கோப்பை - காரணம் என்ன...? - அரசியல் விளையாட்டு!

09:23 PM Nov 23, 2023 IST | Web Editor
உலகக் கோப்பை கிரிக்கெட்   கை நழுவிய கோப்பை   காரணம் என்ன       அரசியல் விளையாட்டு
Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் - கை நழுவிய கோப்பை - காரணம் என்ன...? - கிரிக்கெட்டை மையப்படுத்தி நடந்ததா அரசியல் விளையாட்டு பார்க்கலாம்....

Advertisement

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி, நவம்பர் 19ம் தேதி நிறைவு பெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை, பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்டு மார்லஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலர், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் சிலர் என முக்கிய பிரமுகர்கள் பலர் நேரில் கண்டு ரசித்தனர்.

மூன்றாவது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியைக் காண ’’இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் கபில்தேவ், இரண்டாவது உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த மகேந்திர சிங் தோனி ஆகிய இருவருக்கும் அழைப்பில்லை. அவர்களை புறக்கணித்து விட்டனர்’’ என்கிற சர்ச்சையோடு போட்டியும் தொடங்கியது.

இந்திய மண்ணில், சுமார் 1.30 லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த மைதானத்தில் , நம்பிக்கையோடு களமிறங்கிய இந்திய அணியை வீழ்த்தி, ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை தன்வசப்படுத்தியது. இந்த தொடரில், தொடர்ந்து வெற்றிகளையே பெற்று வந்த இந்திய அணியின் வெற்றி, இறுதிப் போட்டியில் வந்து நின்றது ஏன்? என்கிற கேள்வியும் அது குறித்த விமர்சனமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது விளையாட்டைத் தாண்டி, அரசியலிலும் எதிரொலித்துள்ளது.

பிரதமர் Vs காங்கிரஸ் :

இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொன்னார். தனது எக்ஸ் பக்கத்தில் "உலகக் கோப்பை தொடரில் உங்களின் திறமை, உறுதி குறிப்பிடத்தக்கது. உற்சாகத்துடன் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இன்றும், என்றும் உங்களுடன் நிற்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறிகையில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். நாம்தான் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டமற்றவரால் நாம் தோற்கடிக்கப்பட்டோம்" என்று பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், ’’ மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அங்கு செல்லாத பிரதமர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண சென்றிருக்கிறார் என்றார்.

காரணம் கண்டறித்த தலைவர்கள் : 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், "ப்ரேக்கிங் நியூஸ்: ஆஸ்திரேலிய பிரதமரின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு... அகமதாபாத் ஸ்டேடியத்தின் பெயர் ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியம் என மாற்றம்... ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி" என நக்கலாக குறிப்பிட்டார்.

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா கூறுகையில், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் ஏன் தோற்றது என்று விசாரித்தோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்ததுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆகையால், இனி காந்தி குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாளில் இந்தியா விளையாட வேண்டாம் என பிசிசிஐயிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

அரசியல் காரணம் - மம்தா பானர்ஜி : 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், உலகக் கோப்பைக்கான அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது ஆனால் "பாவிகள் " கலந்து கொண்ட போட்டியைத் தவிர என்றவர். இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றிருந்தால், இந்தியா வென்றிருக்கும். அரசியல் காரணங்களுக்காக அகமதாபாத்தில் நடத்தினார்கள் என்கிறார். மேலும், ’’ஜி 20 நாடுகள் மாநாட்டைப் போல், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் தங்களுடைய அரசியலுக்காக பயன்படுத்த நினைத்தது பாஜக. வழக்கத்துக்கு மாறாக போட்டிகளின் போது ஜெய் ஸ்ரீராம் முழக்கம் அதிகம் கேட்டது’’ என்கிறார்கள்.

உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் கூறுகையில், ‘’லக்னோவில் இறுதிப் போட்டி நடந்திருந்தால், இந்திய அணிக்கு விஷ்ணு பகவான், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் ஆசியால் வெற்றி கிடைத்திருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் அரசியல்?

சிவசேனா (உத்தவ் தாக்ரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்களும் இறுதிப் போட்டி குறித்த விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். உலகக் கோப்பை வெற்றியை தங்களுடைய வெற்றியாக காட்டி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல், அதைத் தொடர்ந்து 2024 மக்களவைப் பொதுத் தேர்தலிலும் வாக்குகளாக மாற்ற திட்டமிட்டனர். அதற்காகத்தான் இறுதிப் போட்டியை பா.ஜ.க.வின் கட்சி நிகழ்ச்சி போல் நடத்தினர். பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. இதற்கு காரணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா தான்’’ என்றும் விரல் நீட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.

கடல் கடந்தும் விமர்சனம் :

ஜெய் ஷாவின் செயல்பாடுகள் இந்தியாவில் மட்டுமல்ல, கடல் கடந்தும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, இந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்த நாட்டு அரசு. இலங்கைக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த, முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் இடைக்கால குழு அமைத்தனர். அந்த குழுவின் தலைவரான அர்ஜுன ரணதுங்கா, ‘’ இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான் காரணம்’’ என்றார். ஆனால், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங இதை மறுத்து, ரணதுங்காவின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இது, அந்நாட்டு அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு அமைப்புகளில் அரசியல் பின்புலம் கொண்டர்கள் நிர்வாகிகளாக இருப்பது, இது முதல் முறையல்ல. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளில் கடந்த காலங்களிலும் அரசியல் தலைவர்கள் பொறுப்புகளில் இருந்துள்ளனர். ஆனால், இந்த முறை மிகையான விமர்சனங்களை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் வைக்கின்றன. என்கிறது பாஜக.

போட்டிகளுக்கான அட்டவணை தொடங்கி இறுதிப் போட்டி வரை பல்வேறு சர்ச்சைகளோடு இந்த உலகக் கோப்பைத் தொடர் நிறைவு பெற்றிருக்கிறது. களத்தில் திறமைக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டிய விளையாட்டில், அரசியல் கூடாது. அது அந்த விளையாட்டையே அழித்து விடும் என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள். முடிவுக்கு வருமா சர்ச்சைகள்...?. ஓயுமா விளையாட்டு அரசியல்...?

Tags :
Advertisement