உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2024 - வெண்கலம் வென்றார் வைஷாலி!
ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஆர். வைஷாலி வெண்கலம் வென்றார்.
சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரேபிட் பிரிவில் இந்தியாவின் மூத்த வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக பிளிட்ஸ் போட்டி நடைபெற்றது.
காலிறுதியில் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் ஸு ஜீனேரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனை ஜுவென்ஜுனிடம் 0.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்ற வைஷாலி வெண்கலத்தை வசப்படுத்தினார்.
இறுதி ஆட்டத்தில் ஜுவென்ஜுன் 3.5.-2.5 என்ற புள்ளிக் கணக்கில் சக வீராங்கனை லெ டிங்ஜியை வீழ்த்தி பட்டம் வென்றார். பிளிட்ஸ் பிரிவில் வெண்கலம் வென்ற வைஷாலிக்கு ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். கடும் சவாலுக்கு மத்தியில் வைஷாலி வெண்கலம் வென்றுள்ளார். “வாகா அகாதெமியின் பயிற்சியில் வைஷாலி இந்த சிறப்பை பெற்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.