மகளிர் உலகக்கோப்பை செஸ் - இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை!
'மகளீர் செஸ் உலகக் கோப்பை போட்டியானது ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில், அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜியை எதிர் கொண்டார் . இதன் முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில் இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலை வகித்தனர். இதனால் இருவருக்குமிடையே வெற்றியாளரை தீர்மானிக்கும் டைபிரேக்கர் சுற்று நேற்று நடைபெற்றது. டைபிரேக்கரிலும் முதல் இரு ஆட்டங்கள் 'டிராவில் முடிந்தன. இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இந்த் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் கோனெரு ஹம்பி 70-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதன் 2-வது ஆட்டத்தில் ஹம்பி 33-வது நகர்த்தலில் ராஜா, ராணி இரண்டுக்கும் குதிரை மூலம் 'செக்' வைத்தார். அத்துடன் தோல்வியை லீ டிங்ஜி ஒப்புக் கொண்டார்.
8 ஆட்டங்கள் நீடித்த இந்த அரையிறுதியில் கோனெரு ஹம்பி 5-3 என்ற புள்ளி கணக்கில் டிங்ஜியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார். இதன் மூலம் 38 வயதான ஹம்பி உலக செஸ் போட்டியில் இறுதிப்போட்டியை முதல் முறை நுழைகிறார்.
இறுதி ஆட்டத்தில் கோனெரு ஹம்பி, சக இந்திய வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கை எதிர்கொள்கிறர். இதன் மூலம் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகியுள்ளது. இரண்டு ஆட்டங்களை கொண்ட இறுதிசுற்றின் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.