#INDvsSL | மகளிர் டி20 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி - இலங்கை அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது இந்திய அணி.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி கடந்த 2012-ம் ஆண்டு முதல் டி20 போட்டி தொடராக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது ஆசியகோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை 19-ந் தேதி தொடங்கியது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி 4 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான், நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றிருந்தது. லீக் சுற்றுகளின் முடிவில், ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து இன்று, இலங்கை தம்புலா மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டனான ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சச்சினி நிசன்சலா, சமாரி அதப்பட்டு, உதேஷிகா பிரபோதனி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் 166 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதில் இலங்கை அணி வெற்றிப் பெற்றால் முதல்முறையாக வெற்றிக்கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடதக்கது.