மகளிர் ஆசிய கோப்பை | இறுதிப்போட்டியில் இந்தியா VS இலங்கை!
நாளை (ஜூலை 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று (ஜூலை 26) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முனீபா அலி 37 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, குல் பெரோஷா அதிகபட்சமாக 25 ரன்களும், கேப்டன் நிடா தர் 23 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பிரபோதனி மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து 63 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அனுஷ்கா சஞ்சீவனி அதிபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதியா இக்பால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தற்போது, பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (ஜூலை 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.