Women's Asian Champions Hockey Trophy 2024: சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!
இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று ஹாக்கி ஆசியகோப்பை தொடரின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும், இறுதியில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும்.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் விளையாடிய 3 போட்டிகளில் அதாவது, மலேசியா, தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளை எதிர்த்து விளையாடி 3 போட்டியிலும் வெற்றிப் பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இந்திய அணி ஒரு வெற்றி பெற்றாலும் அரை இறுதி சுற்றை உறுதி செய்யலாம் எனும் முனைப்புடன் சீன அணியை எதிர்த்து களமிறங்கியது. சீன மகளிர் அணி வலுவான அணி என்பதால் போட்டியானது தொடக்கம் முதலே விறு விறுப்பாக சென்றது.
இதன் காரணமாக முதல் பாதியில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை. அதன் பிறகு நடைபெற்ற 2-வது போட்டியில் இரண்டாவது பாதியில், இந்திய அணி சில திட்டங்களை வகுத்து வேகத்தை அதிகரித்து விளையாடியது. இதன் காரணமாக 3 கோல்களை வரிசையாக அடித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில், இந்திய மகளிர் அணி 3-0 என முன்னிலைப் பெற்று சீன அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றன அரை இறுதி சுற்றையும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.