“கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!
கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி பெண்கள் தவித்து வருவதாகவும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி. கனிமொழி சோமு சிறப்பு கவன ஈர்ப்பின் மூலம் பேசியதாவது,
“இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி இடங்களில் உரிய கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்ற உண்மையை மிகுந்த மனவேதனைக்கு இடையே இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில் அந்த இடங்களில் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது துரதிஷ்டவசமானது.
பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் வரை, வங்கிகள் தொடங்கி பொதுத்துறை அலுவலகங்கள் வரை தினசரி சென்று வரும் லட்சக்கணக்கான மாணவிகள் மற்றும் பெண்கள் பல மணி நேரங்களுக்கு இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவலநிலைதான் இன்றைக்கும் இருக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களிலும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் சூழலில், தனியார் நிறுவனங்களும் கூட குறைந்த பட்ச கழிப்பிட, சுகாதார வசதிகளை செய்துதர மறுக்கின்றன. இது பெண்களின் உடல்நிலையை பாதிப்பது மட்டுமல்ல. அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் பாதிக்கிறது என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்ல... இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லவே தயங்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இந்த அரசு கவனிக்க வேண்டும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்று இந்த அரசு பெருமைப்படும் நேரத்தில், இந்த அவலநிலை முட்டாள்தனமானது மட்டுமல்ல, அவமானகரமானதும் கூட.
எனவே எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையை ஈடுபாட்டோடு அணுகி, கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் பெண்களுக்கான அடிப்படை சுகாதாரத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும். அதன் மூலம் பாலினச் சமத்துவத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என கனிமொழி சோமு தெரிவித்துள்ளார்.