சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டை... போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மதுரையில் பரபரப்பு!
மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலை ஈச்சனேரி பகுதியில் சாலை ஓரத்தில் கோணி சாக்கில் கட்டிய நிலையில் மூட்டை ஒன்று கிடந்தது. அந்த மூட்டையில் இருந்து கால்கள் வெளியே தெரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் பெருங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள் : ‘கூலி’ படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்? வெளியான தகவல்!
அப்போது அந்த மூட்டையில் இருந்தது 40 வயது மதிக்கதக்க பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடற்கூராய்விற்கு பின்னர் உயிரிழந்த பெண் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.
பெருங்குடி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். சாக்கு மூட்டையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.