தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு - தலைமறைவான எஸ்.ஐ.-க்கு போலீசார் வலைவீச்சு
உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக இஷ்ரத் நிகார் (52) தனது மகனுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் சர்மாவிடம், துப்பாக்கி ஒன்றை கொடுத்தார். அதனை சர்மா சுத்தம் செய்துகொண்டிருந்த போது, தவறுதலாக சுட்டதில், இஷ்ரத் நிகார் மீது குண்டு பாய்ந்தது.
கீழே சரிந்து விழுந்த நிகார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இஷ்ரத் நிகார் இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் குமார் சர்மாவிடம் துப்பாக்கியை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். உயிரிழந்த நிகாரின் மகன், ‘பணியை விரைந்து முடிக்குமாறு கூறி, ஆத்திரத்தில் எனது தாயை காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் வேண்டுமென்றே சுட்டார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.