“சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில்”... சமூக மாற்றத்திற்கான பெரும் முன்னெடுப்பு... மகாராஷ்டிராவில் கைம்பெண் சடங்குகளை ஒழித்த 7,000 கிராமங்கள்!
இந்தியா உலகளவில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக பார்க்கபட்டாலும் இங்குள்ள மூட நம்பிக்கைகள், பெண்கள் மீதான ஆளுமைகள், அடக்குமுறைகள் என்பது இன்றளவும் நாடறிந்தவையே. பெண் சுதந்திரம் பற்றி எவ்வளவு பேசினாலும் இங்கு சில பெண்களே பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
மாதவிடாய் போது கோயில் செல்லக்கூடாது, கைம்பெண் மறுமணம் கூடாது, கணவனை இழந்தால் பொட்டு, பூ வைக்கக்கூடாது இவ்வாறு பலவற்றை சொல்லிக் கொண்டு போகலாம். பல துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து வந்தாலும் இதுபோன்ற மூட நம்பிக்கைகளும் இங்கு இன்றும் பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற மூட நம்பிக்கைகளால் பல பெண்களின் வாழ்க்கை சிறையில் வைக்கப்பட்டது போல் உள்ளது.
இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மகாராஷ்டிராவில் ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 27,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 7,683 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கைம்பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் மற்றும் சமூக விலக்கை வலுப்படுத்தும் சடங்குகளை நீக்கும் தீர்மானங்களை கிராம சபைகளில் நிறைவேற்றியுள்ளன.
இந்த செயல்பாடுகளை கண்காணிக்க கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வாட் என்ற கிராமம், நாட்டிலேயே இதுபோன்ற பழக்கவழக்கங்களை சட்டப்பூர்வமாக தடை செய்த முதல் கிராமமாக மாறியபோது இந்த முன்னெடுப்பு மேலும் வலுப்பெற்றது.
கடந்த மே 4, 2022 ஹெர்வாட் கிராமம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் ஒரு பெண்ணின் கணவர் இறந்த பிறகு அவர் வைக்கும் குங்குமம், பொட்டை அகற்றுதல், கால்களில் அணியும் மெட்டிகளை தவிர்த்தல், வளையல்களை உடைத்தல், தாலியை கழற்றுதல் போன்ற நடைமுறைகளைத் தடை செய்தது.
அப்போதிருந்து மகாராஷ்டிராவின் மற்ற கிராமங்கள் ஹெர்வாட்டின் முன்மாதிரியைப் பின்பற்றி, விழாக்களின் கொண்டாட்டங்களில் கைம்பெண்களை இணைத்து வருகின்றன. இந்நிலையில் சமூக மாற்றத்தின் அடுத்தக்கட்டமாக கணவனை இழந்த பெண்களுக்கு நடத்தப்படும் மோசமான சடங்குகள், சம்பிரதாயங்களை இனியும் செய்யப்போவதில்லை என மகாராஷ்டிராவின் 7,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் அறிவித்துள்ளன.