தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்! இன்னும் மெயின் பிக்சரே தொடங்கல அதுக்குள்ளயா?
சென்னையில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக தனியார் காற்று தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாக பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்பிருந்தே பட்டாசுகளை வெடிக்க தொடங்குவர். அந்த வகையில் சென்னையில் பல பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க தொடங்கி இருப்பதாலும், தீபாவளி பண்டிகையின் விடுமுறைக்காக வெளியூர்களில் இருந்து சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகம் பயணம் செய்வதால் வாகனங்களில் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாகவும் சென்னையின் காற்று தர குறியீட்டு அளவு மோசமாக உள்ளது.
இதன்படி, சென்னையில் காற்றின் வளிமண்டல நிலை மோசமான நிலையில் உள்ளது என தனியார் காற்று தர நிர்ணய அமைப்பு தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பு கொடுத்திருக்கக்கூடிய தர நிர்ணய அளவில் இருந்து 3.4 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக சென்னை பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீட்டு அளவு 100 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் பாதுகாப்பான அளவு என்று கருதப்படுகிறது. அந்த அளவை தாண்டும் பொழுது காற்றின் தரம் மோசமாக இருப்பதாக அறியப்படுகிறது.
சென்னையில் தற்பொழுது அந்த அளவு ஒட்டுமொத்தமாக 135 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக அபிராமபுரம், அச்சுதன் நகர் பகுதிகளில் 152 என்ற அளவிலும், பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளில் 157 என்ற அளவிலும், நீலாங்கரை பகுதிகளில் 154 என்ற அளவிலும் உள்ளது.