வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை அமைக்கும் பணி தீவிரம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!
வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
பெட்ரோல், டீசல் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில், மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்பாஸ்ட் நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்க வைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தூத்துக்குடியில், 114 ஏக்கரில் அமையும் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை அமைவது உறுதியானது. இதனை அடுத்து, கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி வின்பாஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி, முதல் கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைய உள்ளது. 1119.67 கோடி செலவில் அமைய உள்ள தொழிற்சாலை கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த உடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.