மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்!
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்த நிலையில் தொடர்ந்து போர் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இந்தியா அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1பி ரேடார் இமேஜிங் செயற்கைகோள்,விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 18-ம் தேதி காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது.
இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். அத்துடன் அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன்கள் கொண்டதாகும். மேலும் இதில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளது.