நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது கோயிலுக்கு அனுப்புவீர்களா? - இந்து சமய அறநிலையத்துறைக்கு எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!
அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா? என இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரி ஒன்றிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட, முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று, துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் சில பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளை பாராயணம் செய்ய வைக்க முயல்வதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை எம்பி சு.வேங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“இந்து அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளை பாராயணம் பாடச்சொல்லி கோயிலுக்கு அனுப்பும் அறநிலையத்துறை நிர்வாகமே, அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.