மின்சார பேருந்துகளுக்கு கூடுதல் கட்டணமா? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
சென்னை வியாசர்பாடி மாநகர போக்குவரத்து கழக பணிமனையில்,
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மின்சார
பேருந்துகளுக்காக கட்டமைக்கப்படும் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “சென்னையில் மின்சார பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடந்துகொண்டு வருகிறது. அந்த வகையில் வியாசர்பாடி பேருந்து பணிமனை பகுதியில் மின்சார பேருந்துகளுக்கான கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளோம். கட்டமைப்பு பணிகள் மே மாத இறுதிக்குள் முடிய உள்ளது. வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதற்கான சார்ஜ் அமைக்கும் இடங்கள் 29 இடங்கள் பணிமனையில் உள்ளே
அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது வடசென்னை பகுதியில் காற்று மாசு ஏற்படாமல் சிறந்த போக்குவரத்து வசதியை தர முடியும். கால சூழல் மாற்றத்திற்கு ஏற்ப இந்த மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மொத்தம் சென்னை மாநகரத்தில் 5 மின்சார பணிமனைகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வியாசர்பாடியில் பணிகள் முடிவுற்று
பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்பட உள்ளது. அதற்குப் பிறகு பெரும்பாக்கம்.
சென்ட்ரல். பூந்தமல்லி. தண்டையார்பேட்டை ஆகிய பணிமனைகளில் இந்த மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக 650 பேருந்துகளும் அடுத்த கட்டமாக 500 மின்சார பேருந்துகளும்
அறிமுகப்படுத்தப்பட உள்ளன. உலக வங்கியின் ஆலோசனைப்படி ஜீசிசி ஒப்பந்த
அடிப்படையில் ஓம் என்ற நிறுவனம் இதனை எடுத்து செய்கிறது . பேருந்துகளை அவர்களது பராமரிப்பில் இயக்கி தருவார்கள். இந்த மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்போது சென்னையில் மிகப்பெரிய மாற்றமாக அமையும் . இதில் ஏசி பேருந்துகளும் சாதாரண பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கும் பயணம் செய்யும் வகையில் இந்த பேருந்துகள்
இயக்கப்பட உள்ளன. டீசல் பேருந்துகளையும் மின்சாரப் பேருந்துகளையும் ஒரே
பணிமனையில் இயக்குவதற்கான சூழல் அமையாது. எனவே மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ள இடங்களில் உள்ள டீசல் பேருந்துகள் மாற்று பணிமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது பணிகள்
அனைத்தும் முடிவடைந்த உடன் முதலமைச்சரிடம் கேட்டு பேருந்துகளை
இயக்கும் நாள் முடிவு செய்யப்படும்.
மின்சார பேருந்து என்பது சாதாரண டீசல் பேருந்துகளை விட கூடுதல் விலைக்கு வருகின்ற பேருந்துகள். எனவே அதனை இயக்குவதற்கான பணியாளர்கள் நம்மிடம் இல்லை. அதனால் டெண்டரை ஓம் என்ற நிறுவனம் எடுத்து உள்ளார்கள் அவர்களே பேருந்து கொண்டு வந்து இயக்குவார்கள் பராமரிப்பார்கள் நடத்துனர்கள் அலுவலகப் பணியாளர்கள் எல்லாம் அரசினுடைய பணியாளர்களாக இருப்பார்கள். அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண இயக்குனர் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெறும்.
மின்சாரப் பேருந்துகள் வருகின்ற காரணத்தினால் டீசல் பேருந்துகளின
எண்ணிக்கையை நாம் குறைக்க மாட்டோம் .கூடுதல் வசதி தான் நாம் ஏற்படுத்தி
தருகிறோம் ஏற்கனவே இருக்கிறவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற
பேச்சுக்கே இடமில்லை. மற்ற பேருந்துகளுக்கு என்ன கட்டணமோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது”
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.