#TVK மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு | புதிய ஏற்பாடு குறித்து வெளியான அப்டேட்!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 5 லட்சம் தொண்டர்களுக்கு சம்பார் சாதம், புளி சாதம் என பலவகையான சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு, மீதம் 2 டன்னுக்கும் அதிகமான உணவுகள் மீந்து வீணாகின. அவை அனைத்தும் அருகிலுள்ள பகுதிகளில் குழித்தோண்டி கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்க இருந்த உணவு ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உணவு டன் கணக்கில் வீணானதால், ஒட்டுமொத்த மாநாட்டின் சாராம்சமும் வெளியே தெரியாமல் உணவு வீணானது மட்டுமே பேசுபொருள் ஆனது. இதனால் சுதாரித்துக் கொண்ட தமிழக வெற்றிக் கழகம், மாநாட்டு திடலில் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை தவிர்த்துள்ளது.
மாநாட்டிற்கு வரும் தற்காலிக மாவட்ட பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரத்தை சுற்றியுள்ள உணவகங்களில் உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது.