பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகல்? - ராமதாஸ் விளக்கம்!
பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகவில்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து திமுக பாடம் கற்க வேண்டும். தெலங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துவங்கியுள்ளது. மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தவறான தகவலை பரப்பிய திமுகவின், சமூக நீதி முகமுடி உடைந்துள்ளது.
தெலங்கானாவில் நேற்று துவங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு, 30-ம் தேதி முடிந்து டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணியில் 80 ஆயிரம் பணியாளரும், 18 ஆயிரம் மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். தமிழ்நாடு அரசு நினைத்தால் 2 லட்சம் பணியாளர்களை கொண்டு, 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விடலாம்.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். தெலங்கானாவில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு, தேசிய அளவில் முன்மாதிரியாக இருக்குமென அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறுவதை முக.ஸ்டாலின் இனியாவது கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள, 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்களை நியமிக்காமல் உள்ளது கண்டிக்கதக்கது.
இதனால் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க சாத்தியமில்லை என்பதால் இந்நிலை மாற்றப்பட வேண்டும். மருத்துவ துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று சமூகவலைதளத்தில் நான் குறிப்பிட்ட நன்னூல் சூத்திரம் அரசியலுக்கும், கூட்டணிக்கும் பொருந்தாது. நான் பாஜகவில் இருந்து விலகவில்லை. இதில் எந்த நோக்கமும் இல்லை. இது நன்னூல் சூத்திரம். திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பாமகவுக்கு உண்டு. சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.