ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? காங். எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. கேள்வி நேரத்தின்போது, கேள்வி நேரத்தில் "பெண்களுக்கு விடியல் பயணம் இருப்பது போல ஆண்களுக்கும் விடியல் பயணம் கொடுக்கப்படுமா? என்று திருவாடானை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,
"ஆண்கள் விடியல் பயணம் குறித்த உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது.
பெண்கள் முன்னேற்றம் பெற வேண்டும், வாழ்க்கையில் சமநிலை அடைய வேண்டும் என்பதற்கான கலைஞர் உரிமைத்தொகை, மகளிர் அணி விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். எதிர் காலத்தில் நிதி நிலை சீரான பிறகு ஆண்கள் விடியல் பயணம் குறித்து கருத்து எடுத்துக்கொள்ளப்படும்" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து ஆட்சியை பிடித்த திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் மகளிர்களுக்கான இலவச பேருந்து பயண திட்டமான விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் வேலைக்கு செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணத்தின் மூலம் சுமார் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிவதாகவும் சொல்லப்படுகிறது.