பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விசிக மாநாட்டில் கெட்டுப் போகுமா? - திருமாவளவன் கேள்வி!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தும் போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறவுள்ள 'தேசம் காப்போம் மாநாடு' தொடர்பான இடத்தை தேர்வு செய்வதற்காக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியதாவது:
"வரும் டிசம்பர் மாதம் 23-ம் தேதி ஜனநாயகம் வெல்லும் மாநாடு ஒருங்கிணைப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு திமுக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் இதில் பங்குபெறுகின்றனர்.
வேங்கைவயல் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிலர் இதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக கருத்து சொல்லப்பட்டுள்ளது. அது நடைபெற்று விரைந்து குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் ஆகிய கட்சிகள் பேரணி நடத்துகிறது. அவர்களால் கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா?
தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட கட்சியினர் வருவதில்லை, அது தான் எதார்த்தமான உண்மை. அவர்கள் கூட்டணி கட்சியிடமும், சாதி அமைப்பிடமும் ஆள் பிடிக்கிறார்கள். பெரியார் சிலையை அகற்றுவோம் என்பது, மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் எனும் கூற்றைப்போல் உள்ளது. பெரியார் சிலையை அகற்ற முடியாது. இது பரபரப்புக்காக ஊடக கவனத்தில் இருப்பதற்கான பேச்சாகும். தமிழ்நாட்டில் இதெல்லாம் எடுபடாது.”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.