ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகலா? - பிசிசிஐ செயலாளர் விளக்கம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தின் காரணமாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக இன்று(மே.19) தகவல் வெளியானது. மேலும், இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் மொஹ்சின் நக்வி பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகும், கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் இருப்பதான் பிசிசிஐ விலக காரணம் என செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஏசிசி-யின் அனைத்து வகை தொடர்களிலிருந்து பிசிசிஐ விலக முடிவெடுத்துள்ளதாக வெளியான செய்திக்கு அதன் செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “ இன்று காலை முதல், ஏசிசி-யின் போட்டிகளான ஆசிய கோப்பை மற்றும் மகளிர் ஆசிய கோப்பை தொடர்களிலில் இருந்து விலக பிசிசிஐ முடிவு செய்ததாக சில செய்திகள் எங்கள் கவனத்திற்கு வந்தது.
இதுபோன்ற செய்திகள் உண்மைக்கும் புறம்பானவை. பிசிசிஐ இதுவரை ஏசிசி போட்டிகள் குறித்து விவாதிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. அது குறித்த எந்தவொரு செய்தியும், அறிக்கையும் முற்றிலும் யூகமானது மற்றும் கற்பனையானது. ஏசிசி போட்டிகள் குறித்த விவாதங்கள் நடைபெறும்போது, எந்தவொரு முக்கியமான முடிவும் பிசிசிஐ ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.