"மாணவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்" - #NationalTeachersAward பெற்ற முரளிதரன் பேட்டி!
39 ஆண்டுகள் மாணவர்களுக்காக நான் செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரை ஆசிரியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும், பணியாற்றி மறைந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து தகுதியான 50 பேர் விருதுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்தியக்கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ராஜகுப்பம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத்துக்கும், மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரனுக்கும் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான ஆசிரியர்களுக்கு செப். 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விருதுபெறும் நல்லாசிரியர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
"டி.வி.எஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தொழில் கல்வி ஆசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன். பள்ளியில் நான் செய்த சின்ன சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி தேசிய நல்லாசிரியர் விருதாக கிடைத்துள்ளது. விருது கிடைக்ககூடிய அளவிற்கு செயல்பட்ட பள்ளியில் பணியாற்றிமைக்காக பெருமைப்படுகிறேன்.
ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கியதன் மூலம் அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர், இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சர்வதேச அளவில் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்ந்தார்கள், என்னிடம் பயின்ற மாணவர்கள் ஆட்டோ மொபைல் துறைகளில் சாதனை புரிந்துள்ளது எனக்கு பெருமையாக உள்ளது.
இவ்விருதினை எனது குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கிறேன். மாணவர்கள் சோர்வடையாமல் அவர்களுக்கான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். மாணவர்களின் முன்னேற்றத்திற்க்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என முரளிதரன் தெரிவித்துள்ளார்.