“கிளாசிக்கல் செஸ் விளையாட விருப்பம் இல்லை” - குகேஷ் உடனான தோல்விக்கு பின் கார்ல்சன் பேட்டி!
2025ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியின் 6வது சுற்றில் 3-0 என்ற கணக்கில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய இளம் வீரரும், நடப்பு உலக செஸ் சாம்பியனுமான குகேஷ் தோற்கடித்தார். கிளாசிக்கல் செஸ் போட்டியில் கார்ல்சனை குகேஷ் தோற்கடித்தது இதுவே முதல்முறையாகும். அதனால் இந்தப் போட்டி குகேஷுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.
ஆனால் மறுபக்கம் தோல்வி அடைந்ததும் கார்ல்சன் மேசையை குத்தியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. கார்ல்சனின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து நார்வே செஸ் கூட்டமைப்பிடமிருந்து எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை. இந்நிலையில் போட்டி குறித்து பேசியுள்ள கார்ல்சன்,
“அடுத்தமுறை கிளாசிக்கல் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பேன். எனக்கு, இந்தக் கிளாசிக்கல் போட்டிகள் பிடிக்கவில்லை.
இனிமேல் எப்போதுமே விளையாடவில்லை எனக் கூறவில்லை. ஆனால், இப்போது பிடிக்கவில்லை.
எந்தப் போட்டியிலும் தோற்பது வலி மிகுந்தது. பிளிட்ஸ், ரேபிட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் தோற்றால்கூட பரவாயில்லை என நினைக்கிறேன்.
நேற்று குகேஷுடன் ஏன் அப்படி ஒரு நகர்வை மேற்கொண்டேன் எனத் தெரியவில்லை. ஆனாலும், கடைசி 3 போட்டிகளில் எனது சிறந்தவற்றைக் கொடுத்துள்ளேன். டாப் வீரராக மிகவும் வலி மிகுந்ததென நினைக்கிறேன். இந்தத் தொடர் சற்று வித்தியாசமாக நடந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.