For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” - அமித்ஷா கேள்வி!

07:16 AM May 22, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா ”   அமித்ஷா கேள்வி
Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து, ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது,

“இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கான தேர்தல். இந்த தேர்தல் 3 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல், ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.

நாட்டிலேயே மிகவும் வளமான மாநிலம் ஒடிசா. கனிம வளம் நிறைந்த மாநிலமாக இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால், மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும். நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள்.

25 ஆண்டு கால அவரது ஆட்சியில், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. மோடி, ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார். ஏழைகளின் வயிறு ஸ்டிக்கர்களால் அல்ல, அரிசியால் நிரப்பப்படுகிறது என்பதை நான் அவருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வளமான ஒடிசா, சுயமரியாதை கொண்ட ஒடிசா, ஒடிசாவை முன்னணி மாநிலமாக்குவது ஆகிய உறுதிகளை பிரதமர் மோடி அளித்துள்ளார். எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

இந்தத் தேர்தலில் நீங்கள், பிரதமர் மோடியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேலும், ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும்” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்தவர். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரசு பதவியை ராஜினமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ளார். வி.கே.பாண்டியன் மாநிலம் தழுவிய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றால் வி.கே.பாண்டியனை நவீன் பட்நாயக் முதலமைச்சராக்குவார் என பேசப்படுகிறது. 

Tags :
Advertisement