கோவை தடாகம் | கால்நடைகளுக்காக உலர வைத்த தீவனத்தை சேதப்படுத்திய யானைகள் - வீடியோ வைரல்!
கோவை தடாகம் பகுதியில் கால்நடைகளுக்காக உலர வைக்கப்பட்ட தீவனத்தை யானைகள் சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை, பேரூர், தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மருதமலை, வடவள்ளி, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குள்ளும் உணவு தேடி வரும் யானைகள் அப்பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவை தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிச. 25) இரவு தடாகம் அருகே உள்ள கரடிமடை பிரிவு, மங்களபாளையம்
பகுதிக்கு குட்டியுடன் 5 யானைகள் கொண்ட யானை கூட்டம் வந்துள்ளன. அங்கு விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனத்தை உலர வைத்து இருந்தார். அந்த தீவனத்தை அங்கு வந்த யானை கூட்டம் தின்று கொண்டு இருந்தன.
அப்பொழுது தகவல் அறிந்து வந்த வனத்துறையினரின் ரோந்து வாகனத்தில் ஒலி எழுப்பியுள்ளார். உடனே யானைகள் வனப் பகுதிக்குள் ஓடின. யானைக் கூட்டத்தின் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இருட்டுப்பள்ளம், பெருமாள்கோயில்பதி, வளையான்குட்டை, முண்டாந்துறை ஆகிய ஊர்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், தனியாக நடந்து செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.