சென்னையில் பரவலாக மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இன்று (நவ.29) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.
இந்த நிலையில், தெற்கு இலங்கை, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவ.29) அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள்: படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் – நடிகர் விஷால்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, புதுப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, ஆழ்வார்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பொழிச்சலூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.