விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே, நேற்று முன்தினம் (ஏப். 4) புகழேந்தி சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்https://t.co/WciCN2SiwX | #villupuram | #MLA | #Pugazhenthi | #DMK | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/LdBKfD0lXF
— News7 Tamil (@news7tamil) April 6, 2024
தொடர்ந்து, நேற்று (ஏப். 5) விக்கிரவாண்டி அருகேயுள்ள வி. சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் புகழேந்தி கலந்து கொண்டார். பின்னர் திடீரென பிரச்சார மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் புகழேந்தியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று (ஏப். 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழேந்திக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த புகழேந்தி, 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.