ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? - தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணத்தை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திருவேங்கடம், வ/33, த/பெ.கண்ணன், குன்றத்தூர், சென்னை உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். திருவேங்கடம் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று ஜூலை 14 ஆம் தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து அவர் காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.
உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த அவர் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது.” இவ்வாறு காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.