சைப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியது ஏன் ? மும்பை காவல்துறை விளக்கம் !
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சைஃப் அலிகானின் கழுத்து, கை உள்ளிட்ட 6 இடங்களில் கத்திக்குத்து பட்டதில் படுகாயமடைந்த சைஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வாலிபர் என்று சந்தேகத்தை பேரில் போலீசார் ஆகாஷ் கனோஜியா என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து சைஃப் அலிகான் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் சைஃப் அலிகானை குத்திய முகமது என்பவரை இன்று அதிகாலை போலீசார் தானேவில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது குறித்து மும்பை துணை காவல் ஆணையர் தீக்ஷித்குமார் அசோக் கெடாம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய முகமது என்ற 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தை சேர்ந்த அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத். கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார்.
அவரிடம் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் எதுவுமில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் மும்பை வந்துள்ளார். இங்குள்ள வீட்டு வேலை பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபிறகு காவல்துறை விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.