“யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?... ஆட்சியில் பங்கு அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” - கிருஷ்ணசாமி!
சென்னை நுங்கம்பாக்கம் கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் கடந்த 2009 முதல் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பிரிவினருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தனியாக வழங்குவது மட்டுமின்றி, எஞ்சி இருக்கும் 15 சதவீதத்திலும் முன்னுரிமை கொடுத்ததன் விளைவாக ஏறக்குறைய பதினைந்திற்கும் மேற்பட்ட முக்கியமான பணியிடங்கள் குறிப்பிட்ட சாதியினருக்கே சென்றுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் சட்டத்திற்கு புறம்பான இட ஒதுக்கீட்டால் ஒட்டுமொத்தமாக SC வகுப்பினர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அறிவிப்பால் 15 ஆண்டு காலமாக மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அறிவிப்பு இல்லை. சமூக நீதி என்று பேசிக்கொண்டு சமூக நீதியின் கழுத்தை திமுக அறுக்கிறது. சமூக நீதிக்கு புறம்பான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி வருகிற மே 17ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ரபட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு சமூக நீதி பேசினால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சாதி வளர்க்க பள்ளிகளில் பணம் கொடுக்கிறது இந்த அரசு. தமிழகத்தில் அதிக சாதி ரீதியான பள்ளிகள் உள்ளது. சாதிப் பெயர்கள் உள்ள பள்ளிகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தை ஒரு சாதி கலவரமாக மாற்றியுள்ளார்கள் திமுக மற்றும் அதிமுக. எதிர்ப்புகள் வந்தால் இந்த அரசு பின்வாங்குகிறது. ஆளுநர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்புகள் இல்லை.
அதிமுக கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். 2026 தேர்தலில் அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். ஆட்சி, அதிகாரத்தில் யார் பங்கு கொடுக்கிறார்களோ அவர்கள் கூடத்தான் எங்களுடைய கூட்டணி இருக்கும். இன்னொருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட மாட்டோம். அதற்காக எங்கள் கட்சியை துவங்கவில்லை. எங்களுக்கும் ஆட்சியில் பங்கு என்றால்தான் எங்கள் கட்சி முழுமையாக பாடுபடும்.
யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?. நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும். எல்லோருக்குமான அதிகாரம் வரவேண்டும் என்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்முடி போல் மேடையில் பேசி வருகிறார்கள். அமைச்சர் பொன்முடி அந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை. அவரை ஏன் இந்த பதவில் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை” என தெரிவித்தார். .