"சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?" - திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!
மக்களவைத் தேர்தல் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களை அறிவிக்காதது ஏன் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் கேள்வி எழுப்பினார்.
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வன்னாங்கோவில் அருகே அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலளார் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இந்த பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது :
“மோடியா அல்லது லேடியா என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். இன்று ‘மோடியா அல்லது எடப்பாடியா’ என்பது போன்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதி இருக்கிறது என்று கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவைத் தேர்தல் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களில் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்களை அறிவிக்காதது ஏன்?
திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலில் அகற்ற இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு அச்சாரமாக இருக்கும். அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்தும் உண்மை. தமிழக கோட்டை மட்டுமல்ல, டெல்லி கோட்டையில் கூட அதிமுகவை அசைக்க ஆள் இல்லை. ஜூன்-4ம் தேதி திமுகவிற்கும், மத்திய அரசுக்கும் முடிவு கட்டும் நாளாக இருக்க வேண்டும்”
இவ்வாறு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் தெரிவித்தார்.