“தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனசாட்சியே இல்லையா?” - நீதிபதிகள் கேள்வி!
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு தரப்பில், “பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள், கழிவு நீரை தாமிரபரணியில் கலந்து வருகிறது. எந்த பின் விளைவுகளையும் கருத்திற்கொள்ளாமல் கழிவு நீரை கலந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் ஒவ்வொரு கட்டமாக, கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநாகராட்சிதான் அதிக அளவில் கழிவு நீரை கலக்கிறது.
6 மாதத்தில் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்படுத்தி விடுவோம். உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பல ஆண்டுகளாக கழிவு நீரை கலக்கிறதே ; இதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனசாட்சியே இல்லையா? கழிவு நீர் கலக்கும் புகைபடங்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது. தாமிரபரணியில் எடுக்கும் ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 1.50 ரூபாய் என தனியார் நிறுவனங்கள் அரசுக்கு கட்டணம் செலுத்தி எடுக்கின்றனர்.
ஆனால் தாமிரபரணி நீரை அனுமதி பெற்று 7 தொழிற்சாலைகள் எடுத்ததில் மட்டும்,
ரூ. 260 கோடி நிலுவை தொகை அரசுக்கு செலுத்த வேண்டியதுள்ளது. இதுபோல்
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் நீர் வரி செலுத்த வேண்டியது நிலுவையில்
உள்ளதா? என்பது குறித்தும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கழிவு நீர் கலப்பதை தடுக்க, கடந்த 2018ல் தாக்கல் செய்த வழக்கிற்கு, 2024 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் கழிவு நீர்
கலப்பதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுக்கப்பட்ட
நடவடிக்கை குறித்து ,பொதுப்பணி துறை, நெல்லை மாநாகராட்சி, உள்ளாட்சி
அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில், தொடர்புடைய
அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.